சான்றிதழ்கள் பாதுகாப்புக்கு இ-பெட்டகம் கைப்பேசி செயலி.

Published Date: June 14, 2023

CATEGORY: EVENTS & CONFERENCES

கல்விச் சான்றிதழ், மதிப்பெண் பட்டியல்களை பொது மக்கள் பாதுகாப்பாக பகிர்வதற்கான இ-பெட்டகம், கைப்பேசி செயலி சேவை தொடங்கப்பட்டுள்ளது.

இந்த செயலியை தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தொடங்கி வைத்தார். சென்னையில் உள்ள தமிழ்நாடு மின்ஆளுமை முகமை அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடந்த நிகழ்ச்சியில், புதிய செயலியின் சேவை தொடங்கப்பட்டது. இணைய சேவை மையம் அளிக்கும் சான்றிதழ்கள், கல்விச் சான்றிதழ்கள், மதிப்பெண் பட்டியல்கள், உரிமங்கள், நிலப் பரிவர்த்தனை ஆவணங்கள் மற்றும் தரவுகளைப் பாதுகாக்க நம்பிக்கை இணையம் வழி செய்திடும். சான்றிதழ்களை சேதப்படுத்தாமல் பாதுகாக்க அரசாங்கத்துக்கு இந்த நம்பிக்கை இணையம் உதவி புரியும். இதே போன்று, பொது மக்களுக்கு உதவி டும் வகையில் இ-பெட்டகம் கைப்பேசி செயலி தொடங்கப்பட்டுள்ளது.

இந்தச் செயலி மூலமாக இணைய சேவை மையங்கள் வழங்கும் சான்றிதழ்கள், கல்விச் சான்றிதழ்கள், மதிப்பெண் பட்டியல்கள் ஆகியவற்றை சேமித்து வைத்து பொது மக்களே பாதுகாப்பாகப் பகிரலாம்.

இந்தச் சேவையால், மக்கள் தங்களது டிஜிட்டல் ஆவணங்களை வேலை வாய்ப்பு, உயர் கல்வி நிறுவனங்கள், அரசு நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் பிற அலுவலர்களின் சரிபார்ப்புக்காக பாதுகாப்பான மற்றும் காகிதமில்லாத முறையில் பகிர முடியும். வேலை வாய்ப்பு, கல்வி சேர்க்கை, அரசு  சேவைகளை அணுகுதல், வெளி நாடுகளுக்கு பயணம் செய்தல், பணிபுரிதல் போன்றவற்றுக்காக ஆவணங்களின் அசல் காகித நகல்களை நேரில் சென்று சமர்ப்பிப்பதற்கான தேவையை இது வெகுவாகக் குறைக்கும்.

முதல் கட்டம்: புதிய சேவையின் முதல் கட்டமாக ஜாதிச் சான்றிதழ், பிறப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், முதல் பட்டதாரிச் சான்றிதழ் உட்பட 24 வகையான சான்றிதழ்களை இ-பெட்டகம் கைப்பேசி செயலி பாதுகாக்கும். இந்தச் செயலி மூலம் மின்னஞ்சல், குறுஞ்செய்தி அல்லது பிற வழிகளில் ஆவணங்களைப் பாதுகாப்பாக பகிர விருப்பான வழியை குடிமக்களே தேர்வு செய்யலாம்.

புதிய செயலி தொடக்க நிகழ்ச்சியில், தகவல் தொழில்நுட்பவியல் துறை செயலர் ஜெ.குமரகுருபரன், மின் ஆளுமை இயக்குநர் பிரவீன், பி.நாயர், இணை முதன்மைச் செயல் அலுவலர் பெ.ரமண சரஸ்வதி உட்பட பலர் பங்கேற்றனர்.

Media: Dinamani